விந்தை அவள்- Prasanna Ganesh

வண்டினம் புடைசூழத் தேன் சொரியும் மலரோ

முன் கண்டிடாத விந்தை இவளெனக் காதோடு பேசிடும் மயிலினமோ

கொஞ்சி குலாவும் அணில் பிள்ளைகள்

அவள் பிஞ்சு விரல் பாதம் வருடிக்

கெஞ்சி விளையாட அழைக்குமோ

அதைக் கண்டு வியந்த மான் கூட்டம்

மெல்லச் சூழ்ந்து அவளை முத்தமிட்டதோ

புல்லின் நுனியில் சிறைப்பட்ட பனித்துளிகள்

அவள் பாதம் பட்டதால் மோச்சம் பெற்றதோ

தேவதை கைப்பட்டுக் கடந்த நதிநீர்

பசுவின் வாய்ப்பட அது தித்தித்ததோ

இயற்கை சுழற்சியை இடைமறித்து

இரவு பகல் இடமாற்றிய பெண் எவளோ

தான் செல்லும் பாதை மறந்து

தடம்மாறி புவி வந்த தேவலோக வாசியோ

போற்றும் மங்கையின் தனிப்பெயர் யாதோ

கண்டறிந்த தேவர்கள் காதில் கூரிய

மந்திரம் என் காதலியின் பெயர்தானோ!!!